கொடைக்கானல் நகராட்சி குப்பைக்கிடங்கில் பயங்கர தீ
கொடைக்கானல் நகராட்சி குப்பைக்கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.
கொடைக்கானலில் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன. தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளால் வெளியேற்றப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் தினமும் சேகரித்து வருகின்றனர். அவை வாகனங்களில் ஏற்றப்பட்டு, கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குப்பைகளில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குப்பைக்கிடங்கு அருகே வனப்பகுதி இருப்பதால், அங்கேயும் தீ பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் காற்று மாசடைந்து, கொடைக்கானல் நகர மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.