கோழிப்பண்ணையில் பயங்கர தீ; 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகின
ஒட்டன்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், பண்ணையில் இருந்த 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின.
கோழிப்பண்ணையில் தீ
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 55). விவசாயியான இவருக்கு, அப்பகுதியில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் செந்தில்நாதன் விவசாயம் செய்வதுடன், அங்கு கோழிப்பண்ணையும் வைத்து நடத்தி வருகிறார். இதற்காக தோட்டத்தில் தகர மேற்கூரை அமைத்து, அதில் கோழிகளை வளர்த்து வந்தார்.
செந்தில்நாதன் ஆயிரம், 2 ஆயிரம் என்ற கணக்கில் கோழிக்குஞ்சுகளை வாங்கி, பின்னர் அவற்றை பண்ணையில் வளர்த்து விற்பனைக்காக அனுப்புவது வழக்கம். இதற்காக அவரது பண்ணையில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை செந்தில்நாதன் புதிதாக வாங்கி, அவற்றை வளர்ப்பதற்காக பண்ணையில் விட்டிருந்தார்.
வைக்கோல் படப்பு
இந்தநிலையில் நேற்று மதியம் அவரது கோழிப்பண்ணையில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பண்ணைக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பண்ணையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றியும், மண்ணை கொட்டியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் இருந்த வைக்கோல் படப்பிலும் பற்றிக்கொண்டது. அப்போது பண்ணையிலும், வைக்கோல் படப்பிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
உடனே இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் அரை மணி நேரம் போராடி பண்ணையிலும், வைக்கோல் படப்பிலும் எரிந்த தீயை அணைத்தனர்.
2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள்
இருப்பினும் பண்ணையில் வளர்ப்பதற்காக விடப்பட்டிருந்த 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி செத்தன. அதேபோல் வைக்கோல் படப்பும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
இந்த தீவிபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோழிக்குஞ்சுகளை வெப்பமூட்டுவதற்காக பண்ணையில் வைக்கப்பட்டிருந்த தனல் பானையில் இருந்து தீப்பொறி பரவி, இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.