வாகன பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ கார், ஆட்டோ எரிந்து நாசம்
தேனி அருகே வாகன பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கார், ஆட்டோ மற்றும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
வாகன பராமரிப்பு நிலையம்
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலையில் வாகன பராமரிப்பு நிலையம் உள்ளது. அதன் அருகில் வாகனங்களுக்கான இருக்கைகள், சீட் கவர்கள் மாற்றும் நிறுவனம் உள்ளது.
இந்நிலையில் இன்று இரவு இந்த சீட் கவர் மாற்றும் நிறுவனம், வாகன பராமரிப்பு நிலையம் ஆகிய இரு இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி வாகன பராமரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், ஆட்டோ ஆகியவை தீயில் எரிந்து நாசம் ஆகின.
தீயணைப்பு படை வீரர்கள்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி, போடி பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடியும் தீ கட்டுக்குள் வரவில்லை. தொடந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர தீ விபத்தால் சீட் கவர் மாற்றும் நிறுவனத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், வாகனங்களில் இருந்து கழற்றி வைத்து இருந்த சீட்கள் போன்றவை எரிந்து நாசமாகின.
மேலும் அங்குள்ள பொருட்கள் வைக்கும் குடோனிலும் தீ பரவியது. சம்பவ இடத்தை தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் வந்து பார்வையிட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.