தங்கும் விடுதியில் பயங்கர தீ
கொடைக்கானல் தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கொடைக்கானலில், ஆனந்தகிரி 4-வது தெருவில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் உள்ள வரவேற்பு அறையில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வரவேற்பு அறையின் மரக்கதவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர். பின்னர் அறை முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது அந்த வழியாக சென்ற தண்ணீர் லாரியை நிறுத்தி தங்கும் விடுதி ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீப்பிடித்த அறையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், தங்கும் விடுதியில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் வரவேற்பு அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.
தீப்பிடித்து எரிந்த தங்கும் விடுதி வரவேற்பு அறையில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அம்சங்களுக்காக கண்காணிப்பு கேமராக்களை செயலாற்றும் கருவியை மாற்றினர். அந்த கருவியின் இணைப்பில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். மேலும் தங்கும் விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். வரவேற்பு அறையில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.