கோழிப்பண்ணையில் பயங்கர தீ


கோழிப்பண்ணையில் பயங்கர தீ
x
தினத்தந்தி 6 Oct 2022 12:30 AM IST (Updated: 6 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் கர்ணன். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கோழிகளை வளர்ப்பதற்காக ஓலையால் மேற்கூரை அமைத்து செட் போட்டுள்ளார். பகலில் தோட்டத்தில் வேலைசெய்துவிட்டு இரவு வீட்டுக்கு சென்றுவிடுவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதிதாக 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வாங்கி பண்ணையில் அடைத்து வைத்தார். மேலும் அவற்றுக்கு தேவையான தீவனங்களை போட்டுவிட்டு வழக்கம் போல் இரவு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று அதிகாலை 6 மணி அளவில் அவர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது கோழிப்பண்ணையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிவதை கண்ட கர்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

5 ஆயிரம் குஞ்சுகள் சாவு

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் கோழிப்பண்ணையில் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கோழிப்பண்ணையில் பற்றிய தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணை முழுமையாக எரிந்து நாசமானது. மேலும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளும் தீயில் கருகி உயிரிழந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.


Next Story