ஒர்க்ஷாப்பில் பயங்கர தீ
பழனியில் ஒர்க்ஷாப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், பழனி ராமநாதன்நகரில் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இவர், மதியமே ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீரென அவருடைய ஒர்க்ஷாப்பில் தீப்பிடித்து எரிந்து கடும் புகைமூட்டம் வெளியே வந்தது. இதைக் கண்டதும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அவர்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே ஒர்க்ஷாப்பில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. அப்போது கடையின் கதவு (இரும்பு ஷட்டர்) உடைத்து கொண்டு பழனி-பாலசமுத்திரம் பிரதான சாலையில் விழுந்தது. நல்லவேளையாக அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒர்க்ஷாப்பில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் ஒர்க்ஷாப்பில் இருந்த மோட்டார் சைக்கிள்கள், காற்று நிரப்பும் எந்திரம் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து அறிந்த பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.