சென்னையில் பயங்கரம்...! அடுத்தடுத்து தொழிலதிபர்கள் கடத்தல்...! பிளாஸ்டிக் கவரில் கிடந்த சடலம்...!
சென்னை சின்மயா நகர் பகுதியில் தொழிலதிபரைக் கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை சின்மயா நகர் பகுதியில் தொழிலதிபரைக் கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கர். இவர் கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று இரவுமுதல் பாஸ்கரை காணவில்லை என்று, பாஸ்கரின் மகன் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், தொழிலதிபர் பாஸ்கரின் உடல் கோயம்பேட்டில் இருந்து நெற்குன்றம் செல்லக்கூடிய சாலையில் சின்மயா நகர் பகுதியில் கை,கால்கள் கட்டப்பட்டு பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையோரம் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இன்று காலை துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வந்த தூய்மைப் பணியாளர்கள் பிளாஸ்டிக் பையில் உடல் கிடப்பது குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாஸ்கரின் உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் குற்றவாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை சேகரிக்கும் பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.தொழிலதிபரான இவர் நேற்று நள்ளிரவு வரை தனது மனைவிக்கு தொலைபேசியில் போன் பேசியுள்ளார் எனவும் இவரது ஏடிஎம் கார்டில் இருந்து இரவு 10:40, 10:50 என இரண்டு முறை அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது பணம் பறிக்கும் நோக்கில் மர்ம நபர் கடத்திக் கொலை செய்து சடலத்தை கால்வாயில் போட்டுவிட்டு சென்றனரா? என பல கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.