கடலூரில் பயங்கரம்தொழிற்சாலை மேற்பார்வையாளர் அடித்துக் கொலை4 தொழிலாளர்கள் கைது


கடலூரில் பயங்கரம்தொழிற்சாலை மேற்பார்வையாளர் அடித்துக் கொலை4 தொழிலாளர்கள் கைது
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தொழிற்சாலை மேற்பார்வையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அடுத்த குடிகாட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி, வெளிமாநில தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பீகாா் மாநிலத்தை சேர்ந்த துவரிக்கா தாக்கூர் மகன் சஞ்சய் குமார் (வயது 43) என்பவர், மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் குடிகாட்டில் வீடு எடுத்து வசித்து வந்தார்.

கட்டையால் தாக்குதல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் சஞ்சய் குமார், தன்னுடன் வேலை பார்க்கும் அதே மாநிலத்தை சேர்ந்த சேட்டுசிங் மகன் சஞ்சய் சிங்(32) என்பவருடன் குடிகாட்டில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார். தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு பதுங்கி இருந்த 4 பேர் கொண்ட கும்பல், அவர்கள் இருவரையும் மறித்து கட்டையால் சரமாரியாக தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து சரிந்து விழுந்தனர். இதற்கிடையே அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சஞ்சய்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சஞ்சய் சிங்குக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 தொழிலாளர்கள் கைது

இந்த கொலை குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களான பீகாரை சேர்ந்த கோதன் என்கிற ராஜேந்திர சவுத்ரி(26), பிந்தி என்கிற ரவீந்திர சவுத்ரி(30), சுனில்குமார்(19), சோனுகுமார்(23) ஆகியோர் சஞ்சய் குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் குவாரி ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த ராஜேந்திர சவுத்ரி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வாக்குமூலம்

நாங்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறோம். மேற்பார்வையாளர் சஞ்சய் குமார் எங்களுக்கு அதிகப்படியான பணி சுமையும், ஷிப்டுகளை மாற்றி, மாற்றி கொடுத்து வந்தார். சில நேரங்களில் தூய்மை பணிகளையும் எங்களை செய்ய சொன்னார். இதன் காரணமாக எங்களுக்குள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் நடந்தது.

இதில் மன உளைச்சல் மற்றும் கோபம் அடைந்த நாங்கள் சஞ்சய்குமாரை பழி வாங்க முடிவு செய்தோம். அதன்படி தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த சஞ்சய்குமாரை சாலையோரம் கிடந்த கட்டையால் தாக்கினோம். இதை தடுத்ததால் சஞ்சய் சிங்கையும் தாக்கினோம். இதில் சஞ்சய்குமார் இறந்து விட்டார் என்று தெரிந்ததும் கேப்பர் குவாரி ரெயில் நிலையம் அருகில் பதுங்கி இருந்தோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

இதையடுத்து ராஜேந்திர சவுத்ரி உள்பட 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story