சேலத்தில் பீதியை ஏற்படுத்திய பயங்கர சத்தம்
சேலத்தில் நேற்று பகலில் பயங்கர சத்தம் எழுந்ததால் பீதி ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மாநகர மக்கள் நேற்று மதியம் வழக்கம் போல் அவரவர் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மதியம் 2 மணி அளவில் வானத்தில் டமார் என்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் சாலையில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களில் சென்றவர்கள் ஆங்காங்கே பீதியில் நின்றனர். அதே போன்று வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்த அனைத்து தரப்பினரும் வானத்தில் என்ன நடந்ததோ? என்று வானத்தை நோக்கி பார்த்தனர். அப்போது வானத்தில் விமானம் செல்வது தெரிந்தது. இதனால் விமானத்தில் இருந்துதான் இந்த பயங்கர சத்தம் கேட்டு இருக்கலாம் என்று பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இது குறித்து சிலர் கூறும் போது, 'மதியம் 2 மணி அளவில் வானத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. அப்போது வானத்தை பார்த்த போது ஒரு விமானம் சென்றது. பின்னர் அது திடீரென்று வந்த திசையில் இருந்து எதிர் திசைக்கு திரும்பியது போன்று காட்சி அளித்தது. அவ்வாறு திரும்பிய போது தான் இந்த பயங்கர சத்தம் கேட்டது. ஆனால் அந்த விமானம் பிறகு எங்கு சென்றது என்று தெரியவில்லை' என்றார்கள். வானத்தில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டதால் சேலம் நகர பொதுமக்கள் நேற்று பகலில் பீதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.