ஈரோட்டில் பயங்கரம் நிலத்தகராறில் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
ஈரோட்டில் நிலத்தகராறில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில் நிலத்தகராறில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தொழிலாளி
ஈரோடு அருகே உள்ள எல்லப்பாளையம் தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). மீன்பிடி தொழிலாளி. இவருக்கு நதியா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் கணேசன் வீட்டை விட்டு 200 மீட்டர் தொலைவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த உறவினர்கள் 3 பேர் நிலத்தகராறு தொடர்பாக அவருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெட்டி படுகொலை
வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால், கணேசனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் நிலைகுலைந்த கணேசன் கீழே விழுந்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் டவுன் துணை போலிஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் திரண்டனர்
மேலும் மோப்ப நாய் வீராவும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'நிலத்தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உறவினர்கள் 3 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் விசாரணை முடிந்தால் தான் கணேசனை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து தெரியவரும் ' என்றனர். தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பரபரப்பு
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
குலை நடுங்கச்செய்யும் இந்த பயங்கர கொலை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.