தூத்துக்குடியில் பயங்கரம்: ஒரே நாளில் 2 பேர் படுகொலை
தூத்துக்குடியில் ஒரே நாளில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் ஒரே நாளில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருட்டு மோட்டார் சைக்கிள்
தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45). இவர் குறிஞ்சிநகரை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (25) என்பவரிடம் ஒரு மோட்டார் சைக்கிளை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார். அதை அவர் பயன்படுத்தி வந்தார்.
இதை பார்த்த ஒருவர், சரவணனிடம் வந்து நீங்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் தன்னுடையது என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அடித்துக் கொலை
இதனால் ஜெயக்குமார் விற்றது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதை சரவணன் அறிந்தார். உடனடியாக ஜெயக்குமாரை பார்த்து தனது பணத்தை திருப்பி தருமாறு கூறினார். ஆனால் அவர் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலையில் ஜெயக்குமாரின் வீட்டுக்கு சரவணன், அவரது தந்தை முருகன் ஆகியோர் சென்று பணத்தை கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து ஜெயக்குமாரை அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விரைந்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன், சரவணனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு கொலை
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சிப்காட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் மற்றொரு கொலை சம்பவமும் அரங்கேறியது.
தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் (60), எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலையில் பாரதிநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர் சுதாரிப்பதற்குள் மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பெரியநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
ஒயரிங் வேலை செய்ததில் கோளாறு
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பெரியநாயகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பெரியநாயகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜகோபால்நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஒயரிங் வேலை செய்து கொடுத்தார்.
அப்போது, அந்த கடைக்கு சென்ற ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். இதன் காரணமாக ெபரியநாயகத்தை மர்மநபர்கள் வெட்டிக் கொைல செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் வேறு ஏதாவது காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.