தேவதானப்பட்டி அருகே பயங்கரம்:காதல் தகராறில் விவசாயி சரமாரி வெட்டிக்கொலை:பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது
தேவதானப்பட்டி அருகே காதல் தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வழிமறித்து தகராறு
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுருளி கிருஷ்ணன் (வயது 38). விவசாயி. இவரது அண்ணன் சுந்தர்ராஜ். இவர்களது உறவினர் மூர்த்தி. நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் பரசுராமபுரத்தில் இருந்து ஜி.மீனாட்சிபுரத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி வீட்டின் அருகே அவர்கள் வந்தனர்.
அப்போது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி சத்யா (40), தம்பி சரவணகுமார் (48), அவரது மனைவி பாண்டி செல்வி (40) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் நடந்து சென்ற சுருளி கிருஷ்ணன் உள்பட 3 பேரையும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது சுந்தர்ராஜ், மூர்த்தி ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். சுருளி கிருஷ்ணனை மட்டும் அவர்கள் மடக்கி பிடித்தனர்.
வெட்டிக்கொலை
பின்னர் சரவணகுமார், சத்யா, பாண்டி செல்வி ஆகியோர் சுருளி கிருஷ்ணன் கைகளை பின்னால் மடக்கி தப்பி ஓடாமல் பிடித்து கொண்டனர். அப்போது சுந்தரமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுருளி கிருஷ்ணன் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து சுந்தரமூர்த்தி உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுருளி கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தி உள்பட 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரையும் ்கைது செய்து விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம்
அப்போது 4 பேரும் சேர்ந்து சுருளி கிருஷ்ணனை கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கைதான சுந்தரமூர்த்தி மகளும், சுருளிகிருஷ்ணனின் அத்தை மகன் விவேக் மூர்த்தி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவேக் மூர்த்தி சுந்தரமூா்த்தி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சுருளி கிருஷ்ணன், சிலருடன் சேர்ந்து விவேக்மூர்த்தி வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி செல்ல வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறினர். இதனை விவேக்மூர்த்தி செல்போன் மூலம் சுந்தரமூர்த்தியிடம் தெரிவித்தார். இதனால் சுந்தரமூர்த்தி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் வழியாக வந்தபோது வழிமறித்து சுருளி கிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொன்றோம் என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். காதல் பிரச்சினையில் விவசாயி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தியது.