சேலத்தில் பயங்கரவாதி கைது: மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5 பேரிடம் தீவிர விசாரணை


சேலத்தில் பயங்கரவாதி கைது: மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5 பேரிடம் தீவிர விசாரணை
x

சேலத்தில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மேலும் 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சேலம்

பயங்கரவாத அமைப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அக்தர் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருடன் தொடர்புடைய ஒருவர் சேலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாரிடம் கூறினார்.

இதைதொடர்ந்து பெங்களூரு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் கடந்த 25-ந் தேதி சேலம் வந்தனர். சேலம் கிச்சிப்பாளையம் குட்டைக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த அப்துல் அலிம் முல்லா (வயது 20) என்பவரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில், தீவிரவாத தாக்குதல் குறித்த படங்கள் பல்வேறு செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைத்து இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து பெங்களுருவுக்கு அழைத்து சென்றனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்தவர், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தெரிந்தவுடன் சேலம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார். துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா தலைமையில் போலீசார் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நிறுவனத்தில் பீகார், ஒடிசா மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5 பேர் வேலைபார்த்து வருவதும் தெரிய வந்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த நிறுவனம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தொழிலாளர்களிடம் விசாரணை

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான அப்துல் அலிம் முல்லா கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் சேலம் வந்துள்ளார். பின்னர் அந்த தனியார் நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்த்து உள்ளார். அவரை வேலைக்கு அழைத்து வந்தது யார்? என்பது குறித்து ஏற்கனவே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர அந்த நிறுவனத்துக்கு எந்தெந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறோம் என்றனர். சேலத்தி்ல் தனியார் நிறுவனத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story