சிறுதானிய விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு


சிறுதானிய விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
திருப்பூர்

போடிப்பட்டி,


உடுமலை பகுதியில் சிறுதானிய விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு

தற்போது புதிது புதிதாக உருவாகி வரும் நோய்களுக்குப் பெயர் வைப்பதற்கே தனி குழு அமைக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான நோய்கள் உருவாகி வருகிறது.

மருந்து டப்பாவை கூடவே தூக்கிச் செல்லும் நிலையே பலருக்கு உள்ளது. இதற்குக் காரணமாக இருப்பது மாறி வரும் நமது உணவுப் பழக்கங்களேயாகும். நமது முன்னோர்களின் உணவில் முக்கிய இடம் பிடித்த சோளம், கம்பு, தினை, ராகி, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை பெரும்பாலானவர்கள் கைவிட்டு விட்டனர். இந்த நிலையில் சமீப காலங்களாக சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

இதனால் சிறுதானியங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பலகார வகைகள், பிஸ்கட்டுகள் போன்றவற்றுக்கு மவுசு கூடியுள்ளது. இதனையடுத்து சிறுதானியங்களின் தேவை அதிகரித்துள்ளதால் சிறுதானிய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

புன்செய் பயிர்

விவசாயிகளின் விதைத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், தரமான விதைகள் விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் உடுமலை பகுதியில் சிறுதானிய விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதை உற்பத்தி நடைபெற்று வருகிறது.

அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானிய விதைப்பண்ணைகளில் திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சிறுதானியப் பயிர்களைப் பொறுத்தவரை குறைந்த நீர்த்தேவையில் புன்செய் பயிராக சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்ட முடியும்.

தற்போது பயிரிடப்பட்டுள்ள கோ 10 ரக கம்பு 90 நாட்களில் குறைந்த அளவு பாசன நீரைப் பயன்படுத்தி ஏக்கருக்கு 1200 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.

மேலும் அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இந்த ரகம் பெரிய அளவிலான மணிகளைக் கொண்டிருப்பதுடன் சாயாத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். அத்துடன் 12.07 சதவீதம் புரதச்சத்து கொண்டுள்ளது.

ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்றது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் அதிகாரிகளால் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

சிறுதானியப் பயிர்கள் மட்டுமல்லாமல் எண்ணெய் வித்துப்பயிர்கள், பயறு வகைப்பயிர்கள் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது உதவி விதை அலுவலர் பிரகாஷ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.


Next Story