நெல் அரவை ஆலைகளில் போலீசார் சோதனை


நெல் அரவை ஆலைகளில் போலீசார் சோதனை
x

தர்மபுரி, காரிமங்கலம் பகுதியில் உள்ள நெல் அரவை ஆலைகளில் கடத்தல் ரேஷன் அரிசி பதுக்கி உள்ளனரா? என்பது குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி, காரிமங்கலம் பகுதியில் உள்ள நெல் அரவை ஆலைகளில் கடத்தல் ரேஷன் அரிசி பதுக்கி உள்ளனரா? என்பது குறித்து தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழகத்தில் இருந்து கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையினர் மாநில எல்லைகளில் அடிக்கடி வாகன தணிக்கை மேற்கொண்டு ரேஷன் அரிசியை கடத்தும் கும்பலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன்படி தர்மபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் அரவை ஆலைகளில் கடத்தல் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அரவை ஆலைகளில் சோதனை

இதையடுத்து தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்- இன்ஸ்பெக்டர் தென்னரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் தர்மபுரி, காரிமங்கலம் பகுதிகளில் உள்ள நெல் அரவை ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர். ஆலைகளில் நுகர்பொருள் வாணிப கழகம் அனுப்பிய நெல் மூட்டைகளை தவிர கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ரேஷன் அரிசி எதுவும் கிடைக்கவில்லை. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நெல் அரவை ஆலைகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story