கனிமவளத்துறை இணை இயக்குனர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை


கனிமவளத்துறை இணை இயக்குனர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை
x

தர்மபுரியில் உள்ள கனிமவளத்துறை இணை இயக்குனர் வீட்டில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

தர்மபுரி

தர்மபுரியில் உள்ள கனிமவளத்துறை இணை இயக்குனர் வீட்டில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

முறைகேடு புகார்

சென்னையில் கனிமவளத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் சுரேஷ் என்கிற சுரேஷ்குமார் (வயது 45). இவர் ஏற்கனவே தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் கனிமவளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார். பின்னர் சென்னைக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

சுரேஷ்குமார் தர்மபுரியில் சூடாமணி தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பணிபுரிந்த போது ஏரிகளில் கிராவல் மண் எடுக்க ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிரடி சோதனை

இந்த நிலையில், தர்மபுரி சூடாமணி தெருவில் உள்ள சுரேஷ்குமாரின் வீட்டிற்கு நேற்று காலை 8.30 மணிக்கு 2 கார்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்தனர். அவர்கள் இணை இயக்குனரின் வீட்டுக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். 6 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை தொடர்ந்து நடந்தது. அப்போது வீட்டில் சுரேஷ்குமார் இல்லை. இதனால் அவருடைய மனைவி உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையை முடித்து கொண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதியம் 2.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது இந்த சோதனை குறித்து எந்த தகவலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. கனிமவளத்துறை இணை இயக்குனர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story