சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் ஆய்வு
அவினாசியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் முக்கிய நகரங்களில் அவினாசியும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதான சாலையில் ேபாக்குவரத்தும் அதிகரித்து விட்டது. அவினாசி-கோவை பிரதான சாலையில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில், போலீஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தபால்நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளன.
கோவில் அருகில் நான்குராத வீதிகளில் ஏராளமான திருமண மண்டபங்கள், வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மெயின் ரோட்டில் பூக்கடை, பழக்கடை, கரும்புக்கடை, சிப்ஸ் கடை, சிற்றுண்டி கடை, பெட்டிக்கடைஎன ரோடு முழுவதும் அதிகரித்துள்ளது. இதனால் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் தங்களது இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களை ரோட்டில் நிறுத்தி வருகின்றனர். அது மட்டுமல்ல சாலையோரம் வடமாநில தொழிலாளர்கள் கடைகள் அமைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
ஆய்வு
எந்த நேரமும் இந்த மெயின் ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போய் வருவதால் போக்குவரத்து மிகவும் இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து சாலையோர கடைக்காரர்களிடம் போக்குவரத்து போலீசார் பலமுறை கடைகளை அப்புறப்படுத்த கோரி வலியுறுத்திச் சொல்லியும் எந்த பயனும் இல்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் உத்தரவின் பேரில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நேற்று அவினாசி தாசில்தார் ராஜேஷ் பேரூராட்சி செயல் அலுவலர்| செந்தில்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல்கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அவினாசிமெயின் ரோட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.