நெல்லை-தென்காசி இடையே மின்சார ரெயில் என்ஜின் இயக்கி சோதனை


நெல்லை-தென்காசி இடையே மின்சார ரெயில் என்ஜின் இயக்கி சோதனை
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை-தென்காசி இடையே மின்சார ரெயில் என்ஜினை இயக்கி நேற்று சோதனை நடந்தது. இந்த ரெயில் பாதையில் நாைள அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

நெல்லை-தென்காசி இடையேயான 72 கி.மீ. தூர ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் முடிந்து தற்போது போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக அந்த பாதையில் மின்சார ரெயில் என்ஜினை இயக்கி சோதனை நேற்று நடந்தது. 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட அந்த என்ஜின் நெல்லையில் இருந்து புறப்பட்டு தென்காசி வரை சென்று மீண்டும் நெல்லைக்கு வந்தது. அந்த என்ஜின், பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நெல்லை-செங்கோட்டை ரெயில் கிராசிங்கிற்காக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது பயணிகள் அதை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

இ்ந்த நிலையில் நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வரையிலான பாதையை தென்னக ரெயில்வே முதன்மை தலைமை மின்மயமாக்கல் என்ஜினீயர் உள்ளிட்டோர் நாளை (திங்கட்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த ஆய்வானது, நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும். பின்னர் தென்காசியில் இருந்து நெல்லைக்கு மின்சார ரெயில் சோதனை நடத்தப்படும். இந்த பணிகள் அன்றையதினம், மாலை 4.30 மணியுடன் நெல்லை ரெயில் நிலையத்தில் முடிவடையும் படி திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார ரெயில் இயக்குவதற்கு வசதியாக வீரவநல்லூரில் ரெயில்வே சார்பில் துணை மின் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் மற்றும் பேட்டையில் மின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் துணை பிரிவு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story