பல்பொருள் அங்காடிகளில் சோதனை
திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் நேற்று பழனி நகரில் உள்ள பல்பொருள் அங்காடிகள், பலசரக்கு மொத்த குடோன்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக துவரம்பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் அவற்றின் செயற்கை விலை ஏற்றத்தை அதிகரிக்க பலசரக்கு குடோன்கள், பல்பொருள் அங்காடிகளில் பதுக்கி வைத்துள்ளனரா? என்று வழங்கல் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் நேற்று பழனி நகரில் உள்ள பல்பொருள் அங்காடிகள், பலசரக்கு மொத்த குடோன்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது பழனி நகராட்சி சாலை, புதுதாராபுரம் சாலை பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடிகளில் அவர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பருப்பின் அளவு, குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பருப்பின் விவரம் குறித்து பார்வையிட்டார். மேலும் பருப்பு பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து காலாவதியான பொருட்கள் ஏதும் விற்பனைக்கு உள்ளதா? எனவும் சோதனை செய்தார். அவ்வாறு பொருட்கள் இருந்தால் அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கடை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே பல்பொருள் அங்காடிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் தொடர்ந்து நின்று கொண்டே இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு நாற்காலிகள் ஏதும் போடவில்லையா? என கேட்டார். அதோடு மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்று வரக்கூடிய சாய்வுதளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.