நெல்லை-திருச்செந்தூர் புதிய மின்பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது
நெல்லை-திருச்செந்தூர் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக முடிந்தது
நெல்லை-திருச்செந்தூர் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக முடிந்தது.
மின்மயமாக்கல்
நாடு முழுவதும் மீட்டர் கேஜ் ரெயில் பாதைகள் அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு வந்தன. அதை தொடர்ந்து தற்போது மின்சார என்ஜின்களை இயக்கும் வகையில் மின்மயமாக்கல் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நெல்லையில் இருந்து அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூருக்கு ரெயில் பாதையின் மேலே மின்சார கம்பிகள் பொருத்தும் பணி கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தது.
இதற்காக குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்து போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் புதிய மின்மயமாக்கப்பட்ட நெல்லை -திருச்செந்தூர் ரெயில் பாதையை தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா தலைமையில் அதிகாரிகள் நேற்று சிறப்பு ரெயிலில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்கான சிறப்பு ரெயில் காலை நெல்லை சந்திப்பில் இருந்து புறப்பட்டது. முதலில் பாளையங்கோட்டை குறிச்சி துணை மின் நிலையத்தை ஏ.கே.சித்தார்த்தா திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் வழியில் உள்ள 14 துணை மின் நிலையங்களை பார்வையிட்டு திறந்து வைத்தார்.
மேலும், செல்லும் வழியில் உள்ள பாலங்கள், வயல் வெளிகளில் மின்கம்பங்கள் நடவு, மின் கம்பிகள் ஆகியவை சரியாக அமைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு மதியம் 1.30 மணிக்கு திருச்செந்தூர் ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.
சோதனை ஓட்டம்
இந்த சிறப்பு ரெயிலுக்கு திருச்செந்தூரில் பயணிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 3.05 மணி அளவில் சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து சோதனை ஓட்டமாக புறப்பட்டது. இந்த ரெயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. சரியாக 4.05 மணிக்கு, அதாவது 1 மணி நேரத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
அந்த ரெயிலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் பயணிகள் வரவேற்றனர். இந்த ஆய்வின் போது மதுரை ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ரமேஷ் பாபு, தலைமை திட்ட இயக்குனர் சமீர் டிகே, முதன்மை மின் பிரிவு பொறியாளர் சுந்தரேசன் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
2 வாரத்தில் மின்சார ரெயில்
இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ரமேஷ் பாபு கூறியதாவது:-
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு மின்மயமாக்கப்பட்ட புதிய ரெயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயிலை இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்துள்ளோம். திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மின்சார என்ஜின் ரெயில் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தலைமை மின் பொறியாளர் அறிக்கை அளிப்பார். அதை தொடர்ந்து, இன்னும் 2 வாரத்தில் நெல்லை - திருச்செந்தூர் இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரெயில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.