ஜவுளிக்கடை தீ விபத்தில் ரூ.20 லட்சம் துணிகள் எரிந்து நாசம்


ஜவுளிக்கடை தீ விபத்தில் ரூ.20 லட்சம் துணிகள் எரிந்து நாசம்
x

ஜவுளிக்கடை தீ விபத்தில் ரூ.20 லட்சம் துணிகள் எரிந்து நாசமாது.

திருச்சி

திருச்சி தில்லைநகர் மெயின்ரோட்டில் மக்கள் மன்றம் உள்ளது. இங்குள்ள மைதானத்தில் திருச்சி உறையூர் செட்டித்தெருவை சேர்ந்த ரபீக் (வயது 45), ஜெயக்குமார் (48), அஜ்மல் (45) ஆகிய 3 பேர் சேர்ந்து மாத வாடகைக்கு ஜவுளிக்கடை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு 12 மணி அளவில் ஜவுளிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த துணிகள் மள, மளவென எரிய தொடங்கின. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இதனை கண்ட அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் அனுசியா தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் அங்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் கடைக்குள் இருந்த அனைத்து துணிகளும் எரிந்து சாம்பலாகின. பின்னர் ஒருமணிநேர போராட்டத்துக்கு பிறகு, தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தில்லைநகர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story