ஜவுளிக்கடை உரிமையாளர் அடித்துக்கொலை
புதுக்கோட்டை அருகே திருமயத்தில் இடத்தகராறில் ஜவுளிக்கடை உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ேபாலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மகன் கலிபுல்லா (வயது 54). இவர் திருமயத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த தனபால் (51) என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்தது. இதுகுறித்து இன்று காலை மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கலிபுல்லாவை, தனபால் மற்றும் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கலிபுல்லாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கலிபுல்லா பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதுகுறித்து தகவல் அறிந்த வர்த்தக சங்கத்தினரும், பொதுமக்கள் மற்றும் கலிபுல்லா உறவினர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி திருமயம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குற்றவாளிகள் விரைவாக ைகது செய்யப்படுவார்கள் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தனபால் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கலிபுல்லா கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருமயத்தில் நேற்று மதியம் 1 மணியிலிருந்து மாலை 6 மணி வரை கடையடைக்கப்பட்டது. இடத்தகராறில் ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.