ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நடந்தது.
ஏரல்:
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் நேற்று தை அமாவாசை திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு தரிசனம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலக்காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்பட முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் செய்திருந்தனர். திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.அ.க.கருத்த பாண்டிய நாடார் செய்திருந்தார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
நாளை (திங்கட்கிழமை) காலை தாமிரபரணி சகல நோய் தீர்க்கும் புனித நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது.