அழகர்மலையில் தைலக்காப்பு உற்சவம்: நூபுர கங்கையில் நீராடிய கள்ளழகர்-திரளான பக்தர்கள் தரிசனம்
தைலக்காப்பு உற்சவத்தையொட்டி அழகர்மலை நூபுர கங்கையில் கள்ளழகர் நேற்று நீராடினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில்
தைலக்காப்பு உற்சவத்தையொட்டி அழகர்மலை நூபுர கங்கையில் கள்ளழகர் நேற்று நீராடினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தைலக்காப்பு உற்சவம்
மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடக்கும் தைலக்காப்பு உற்சவம் தனி சிறப்புடையதாகும். இந்த ஆண்டுக்கான தைலக்காப்பு உற்சவம் கடந்த 3-ந் தேதி நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபத நாதன் சேவையுடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் கள்ளழகர்், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் இருப்பிடத்தில் இருந்து மேளதாளம் முழங்க, யானை, பரிவாரங்களுடன் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலை நோக்கி சென்றார். வழியில் மலைப்பாதையில் அனுமன் தீர்த்தம், கருட தீர்த்த எல்லையில் அழகருக்கு தீபாராதனை நடந்தது.
நீராடிய கள்ளழகர்
சுமார் 4 கி.மீ தூரம் உள்ள அழகர்மலைக்கு சென்றைடைந்தார். அங்கு நூபுரகங்கை மண்டபம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளாலும், பூமாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சகல மங்கலவாத்தியங்களுடன் கள்ளழகர், அங்குள்ள மண்டபத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளினார். அந்த மண்டபத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசி, திராட்சை, வாழை உள்ளிட்ட 9 வகையான பழ வகைகள் தோரணங்களாக அலங்கரிக்கப்பட்டு அழகரை வரவேற்றன.
இதைதொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க அழகருக்கு திருத்தைலம் சாத்தப்பட்டது. அதன் பின்னர் கள்ளழகர் பெருமாள், நூபுர கங்கையில் திருமஞ்சனமாகி நீராடினார். காலத்திற்கும் வற்றாத தீர்த்தத்தில் அழகர் நீராடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அதன் பிறகு மேல்மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் பல்லக்கில் எழுந்தருளி அழகர்கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார்.
தைலக்காப்பு திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தர்கள் வசதிக்காக எல்.இ.டி. திரை மூலம், நூபுர கங்கை அடிவாரம், முருகப்பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை கோவில், கள்ளழகர் கோவில் ஆகிய இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
திரளான பக்தர்கள் தரிசனம்
முன்னதாக ராக்காயி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. ஆண்டிற்கு ஒருமுறை அழகர், சோலைமலைக்கு சென்று திரும்புவது பெருமை படைத்ததாகும்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா நடந்தபோது, இந்த வருடமும் நூபுர கங்கை பகுதியில் மதியம் சாரல் மழை பெய்தது. இந்த தைலக்காப்பு திருவிழாவை காண வெளிமாவட்டங்கள், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.