தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

விராலிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

புதுக்கோட்டை

தைப்பூச திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அறியாமையால் சிவ நிந்தனை புரிந்து மயங்கிய நாரதருக்கு விராலிமலை முருகவேல் உபதேசம் செய்து உயர் பதம் அளித்தார்.

இதனால் இங்கு நாரதருக்கு உற்சவசிலை உள்ளது. மேலும் அருணகிரிநாதருக்கு முருக பெருமான் காட்சிதந்து அஷ்டமாசித்திகளை வழங்கி திருப்புகழ் பாடவைத்த தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவானது வெகு விமரிசையாக 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கொடியேற்றத்துடன் தொடக்கம்

அதேபோல் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழாவானது இன்று தொடங்கியது. இதையடுத்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி மலைமேல் உள்ள முருக பெருமான், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் முருக பெருமான் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு அதில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. இதில் விராலிமலை சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

4-ந்தேதி தேேராட்டம்

திருவிழாவை தொடர்ந்து காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி அடுத்த 10 நாட்களுக்கு வீதி உலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது. அதனை தொடர்ந்து 5-ந் தேதி இரவு தெற்கு தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 6-ந்்தேதி விடையாற்றியுடன் விழாவானது நிறைவடைகிறது.


Next Story