முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச திருவிழா
முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கம்மாபுரம்,
கம்மாபுரம் அடுத்த முதனை கிராமத்தில் செம்புலிங்க அய்யனார், பெரியநாயகி உடனுறை முதுகுன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது.
இதில் கோவிலுக்கு அருகில் உள்ள சித்தர் ஏரியில் எழுந்தருள வேல் மூழ்குதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து 5-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 6-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துராஜா, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் மாலா, ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.