நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, விஸ்வரூப பூஜைகள் நடந்தது. பின்னர் சாமி சன்னதியின் முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து கொடி மரத்துக்கு மஞ்சள் பொடி, பால், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிடுதல் வைபவம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி, 5-ந்தேதி சவுந்தர சபாவில் நடராஜ பெருமான் திருநடன காட்சி, 6-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.


Next Story