தலைஞாயிறை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும்
நாகையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தலைஞாயிறை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தலைஞாயிறை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-
மணியன்: வேதாரண்யம் தாலுகாவிற்கு புதிய ரக நெல் விதை குறுவை, சம்பாவிற்கு வந்துள்ளதா?, அதனுடைய வயது எத்தனை நாள் என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மண் பரிசோதனை செய்ய நடமாடும் வாகனம் வேதாரண்யம் பகுதிகளுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கோடை உழவு செய்திட அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மானிய விலையில் உழவு செய்து, வயல்களை செப்பனிட டிராக்டர்கள் வழங்க வேண்டும் என்றார்.
தனி தாலுகா
கமல்ராம்: தலைஞாயிறை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். தலைஞாயிறு பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிக்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவிற்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். சம்பந்தம்: தமிழக ஒருங்கிணைப்பு நிலம் கையகப்படுத்துதல் சிறப்பு சட்டம்-2023 தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வணிகம் உள் கட்டமைப்பு நகர் மயமாக்கல், தொழில் மயமாக்கல் ஆகியவற்றுக்காக குளங்கள், ஆறுகள், நீரோடைகள் உள்ளிட்ட அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வர்க்கக்கூடாது.
கோடை உழவு மானியம்
சரபோஜி: மழையால் ஏற்பட்ட உளுந்து பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து வாய்க்கால்களும் தூர்வார வேண்டும். குறுவை, சம்பாவுக்கு தேவையான உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுப்பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பாபுஜி: நாகை மாவட்டத்தில் கோடை உழவு செய்வதற்கு கூடுதலாக செலவாகிறது. எனவே அரசு கோடை உழவு மானியம் வழங்க வேண்டும். கடந்தாண்டு போல் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும். ஆறுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.