பூமியை நோக்கி வரும் 26 ஆயிரம் விண்கற்கள்
பூமியில் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் தாக்கியதால் டைனோசர் இனமே அழிந்து விட்ட நிலையில் தற்போது பூமியை நோக்கி 26 ஆயிரம் விண்கற்கள் வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறினார்.
பிரபஞ்ச மகா வேள்வி
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில் 33-வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. குத்துவிளக்கு ஏற்றுதலுடன் தொடங்கிய விழாவிற்கு உலக சமாதான அறக்கட்டளை பொதுச் செயலாளர் சுந்தரராமன் வரவேற்புரை வழங்கினார். சென்னை சில்க்ஸ் இயக்குனர் விநாயகம் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை சிவதாணு பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தி அமைதியை கொண்டு வருவதற்கு சக்தி வாய்ந்த நாடுகள் கூட முன் வரவில்லை. பொருளாதார வளர்ச்சியை காரணம் காட்டி தொழிலகங்களை அதிகப்படுத்தியதால் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து அது பூமியை விட்டு வெளியே செல்ல முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டுள்ளது. அதன் படலத்தை தாண்டி பூமியின் வெப்பமும் மேலே செல்ல முடியாமல் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தால் பனிக்கட்டி உருகி கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 2ஆயிரத்து 100-ம் ஆண்டிற்குள் சுமார் 2 மீட்டர் வரையிலும் கடலின் நீர்மட்டம் உயர்ந்து விடும். இதனால் கடலோர மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
இதை தவிர்ப்பதற்கு பருவநிலை மாறுபாடு குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. அதனால் எந்த மாற்றமும் பெரிதாக ஏற்படவில்லை.
விண்கற்கள்
65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் பூமியை தாக்கி டைனோசர் உள்ளிட்ட உயிரினங்களை அழித்து விட்டது. இதே போன்று 26 ஆயிரம் விண்கற்கள் பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. அதை நாம் தடுத்தாக வேண்டும். எப்படி தடுத்து நிறுத்துவது என்று குறித்து ஆராய்ச்சியும் நடந்து கொண்டு உள்ளது.
உலகத்துக்கு வெளியேயும் மாசுபடும் காரணிகள் அதிகரித்து உள்ளது. இதற்குக்காரணம் ஆராய்ச்சி வேலை முடிந்த பிறகும் நிறைய செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுழன்று கொண்டிருப்பதாகும். அதை சுத்தம் செய்வதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து குருமகான் அருளுரை வழங்கினார்.