கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்
வனப்பகுதியில் பள்ளிக்குசெல்லாத ஆசிரியர்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அவல நிலை உள்ளது.அரசு அதிகாரிகள் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?
அதிகாரிகள் ஆய்வு
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட மலைவால் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.இந்த சூழலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குளிப்பட்டி வனப் பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால் அங்கு கட்டப்பட்டிருந்த பள்ளிக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் நிலவியது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் அடங்கிய குழுவினர் நேற்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
எட்டாக்கனியான கல்வி
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற எங்களுக்கு எந்த ஒரு தேவையும் சேவையும் எளிதில் கிடைப்பதில்லை. ஒவ்வொன்றையும் நீண்ட போராட்டத்திற்கு பிறகே பெற்று வருகின்றோம். அந்த வகையில் அடிப்படை, அத்தியாவசியம், வாழ்க்கை, வாழ்வாதாரத்திற்கு ஆதாரமான கல்வி இன்று வரையிலும் எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த பலத்த மழையால் குலிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் சேதமடைந்ததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று குருமலை பகுதியில் பள்ளிக்கூடம் சேதம் அடைந்துள்ளது. அதனையும் அகற்றி விட்டு புதிதாக கட்டித் தர வேண்டும். மேலும் மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வருவதில்லை.
ஆசிரியர்களின் அலட்சியம்
5-ம் வகுப்பு வரையிலும் அனைவரும் தேர்ச்சி என்பதால் அவர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அடிப்படை கல்வியை கற்றுக்கொள்ள முடியாமல் எங்களது குழந்தைகள் திணறி வருகின்றனர். அதைத்தொடர்ந்து உயர் கல்விக்காக செல்லும்போது மற்ற மாணவர்களுடனும், ஆசிரியருடனும் ஒத்துழைத்து செல்ல முடியாததால் கல்வி பாதியிலேயே நின்று விடுகிறது. மலைவாழ் கிராமத்தில் உள்ள குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி அடையாததற்கு முழுக்க முழுக்க ஆசிரியர்களின் அலட்சியமே காரணமாகும்.
இது குறித்து தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாமானியனையும் சரித்திர நாயகனாக மாற்றும் சக்தி வாய்ந்த கல்வி எங்களுக்கு கிடைக்காததால் வாழ்வாதாரம் முன்னேறாமல் அப்படியே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மலைவாழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஆசிரியர்கள் அன்றாட பணிக்கு வர நடவடிக்கை எடுக்குமாறும் சேதமடைந்த பள்ளிக்கூடத்தை அகற்றிவிட்டு விரைவில் கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.