கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி
சங்கராபுரம் அருகே கூத்தாண்டவர் கோவிலில் அரவான் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் பழமைவாய்ந்த கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்பு தேர் திருவிழா நடைபெற்றது. அதன் பிறகு தேர் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சித்திரை மாத தேர் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி காப்புக்கட்டுதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கூத்தாண்டவர் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. பின்னர் நேற்று கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான கூத்தாண்டவர் தேர் திருவிழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.