நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்; 4 அமைச்சர்களின் இலாகா மாற்றம்
நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டார். புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. 4 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றப் பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அமைச்சரவை 3-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால ஆட்சியில் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டார்.
பதவி ஏற்பு
இதுகுறித்து கடந்த 9-ந் தேதி கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது. அதில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாகவும், அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
மேலும், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தர்பார் அரங்கத்தில் 11-ந் தேதி (நேற்று) காலை 10.30 மணிக்கு நடக்கும் பதவி ஏற்பு விழாவில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவி ஏற்பார் என்று கவர்னர் மாளிகை அறிவித்து இருந்தது.
கவர்னருக்கு அறிமுகம்
அதன்படி, நேற்று கவர்னர் மாளிகையில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக காலை 9.35 முதலே அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரத்தொடங்கினர். முக்கிய அரசுத்துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் வந்தனர். டி.ஆர்.பி.ராஜாவின் குடும்ப உறுப்பினர்கள் விழா பகுதிக்கு வருகை தந்தனர்.
தி.மு.க. எம்.பி.யும், டி.ஆர்.பி.ராஜாவின் தந்தையுமான டி.ஆர்.பாலு காலை 9.58 மணிக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா 10.05 மணிக்கு வருகை தந்தார். பின்னர் 10.23 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். 10.29 மணிக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி, அவரை வரவேற்றார். பின்னர் விழா மேடையில் கவர்னர், முதல்-அமைச்சர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வந்தமர்ந்தனர்.
தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. டி.ஆர்.பி.ராஜாவை கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர், டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைக்க வேண்டும் என்று கவர்னருக்கு தலைமைச் செயலாளர் அழைப்பு விடுத்தார்.
உறுதிமொழி
அதைத் தொடர்ந்து பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் கவர்னர் தொடங்கி வைக்க அதை தமிழில் கூறி, 'உளமாற' உறுதி ஏற்பதாக டி.ஆர்.பி.ராஜா படித்தார். பின்னர் டி.ஆர்.பி.ராஜாவும், கவர்னரும் பதவி ஏற்பு தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் டி.ஆர்.பி.ராஜாவை கவர்னர் கைகுலுக்கி வாழ்த்தினார்.
அதை தொடர்ந்து கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்து வழங்கினார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு கவர்னர் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். கவர்னருக்கு முதல்-அமைச்சர் பூங்கொத்து கொடுத்தார். பின்னர் பதவி ஏற்பு விழாவை கவர்னர் அனுமதியுடன் முடிப்பதாக தலைமைச் செயலாளர் அறிவித்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சரவை குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவி ஏற்ற சிறிது நேரத்தில் அவருக்கான புதிய இலாகா தொடர்பாகவும், மேலும் சில அமைச்சர்களுக்கு இலாகாக்கள் மாற்றப்பட்ட விவரங்களையும் ராஜ்பவன் வெளியிட்டது. இதுகுறித்து கவர்னர் மாளிகை ராஜ்பவனில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அமைச்சர்கள் சிலருக்கு இலாகாக்களை மாற்றி முதல்-அமைச்சர் செய்துள்ள பரிந்துரையை கவர்னர் அங்கீகரித்துள்ளார். அதன்படி, டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை அளிக்கப்படுகிறது. அவர் தொழில்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
தங்கம் தென்னரசு
தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து மாற்றப்படுகிறார். அவருக்கு நிதி, திட்டமிடல், மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால நன்மைகள், புள்ளியியல் மற்றும் தொல்லியல் ஆகிய துறைகள் வழங்கப்படுகின்றன.
தொல்லியல் துறை ஏற்கனவே அவரிடம் இருந்தது. தங்கம் தென்னரசு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
சாமிநாதன்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழ் ஆட்சி மொழி, தமிழ் கலாசாரம் ஆகிய துறைகள் கூடுதலாக வழங்கப்படுகின்றன.
அவரிடம் செய்தி மற்றும் விளம்பரம், சினிமா தொழில்நுட்பம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் அச்சுத் துறை ஆகியவை ஏற்கனவே உள்ளன. அமைச்சர் சாமிநாதன், தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
பழனிவேல் தியாகராஜன்
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை வழங்கப்படுகிறது. பழனிவேல் தியாகராஜன் இனி தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை வழங்கப்படுகிறது. அவர் இனி பால்வளத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மகனிடம் எதிர்பார்ப்பு
டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் பதவி ஏற்ற பின்னர் ராஜ்பவனில், டி.ஆர்.பாலு எம்.பி. அளித்த பேட்டி வருமாறு:-
அமைச்சராக பதவி ஏற்றுள்ள என் மகன் டி.ஆர்.பி.ராஜாவிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது, தமிழகத்தை வளமுள்ள மாநிலமாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் திராவிட மாடல் அரசின் கொள்கைகளை முன்வைத்து அவர் செயல்பட வேண்டும்.
அதிருப்தியா?
முதல்-அமைச்சரின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மிகச் சிறப்பான அமைச்சர் என்ற பெயரை டி.ஆர்.பி.ராஜா எடுக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். முதல்-அமைச்சரின் பெயருக்கு டி.ஆர்.பி.ராஜா புகழ் சேர்க்க வேண்டும்.
பூண்டி கலைவாணன் போன்ற சிலர் அதிருப்தியாக இருப்பதாக நீங்கள் கூறினால், அவர் என் நண்பர். டி.ஆர்.பி.ராஜா அமைச்சராவதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உழைப்பின் வெற்றி
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மனைவி சர்மிளா பேசும்போது, ''எப்போதோ கிடைக்க வேண்டியது. தற்போது கிடைத்துள்ளது. இது தலைவரால் கிடைத்த வெற்றி. டெல்டா மாவட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. தனிப்பட்ட வெற்றி அல்ல. 12 ஆண்டுகள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. முதல்-அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதை அவர் செய்வார்'' என்று தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவு பேசும்போது, 'டி.ஆர்.பி.ராஜா நல்ல இளைஞர். அமைச்சர் பணியில் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு என் வாழ்த்துகள்'' என்றார்.