தங்கப்பல்லக்கில் கள்ளழகர் இன்று மதுரை புறப்படுகிறார் - 480 மண்டபங்களில் எழுந்தருளல்
சித்திரை திருவிழாவையொட்டி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் இன்று மதுரை புறப்படுகிறார். 480 மண்டபங்களில் எழுந்தருளுகிறார்.
அழகர்கோவில்
சித்திரை திருவிழாவையொட்டி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் இன்று மதுரை புறப்படுகிறார். 480 மண்டபங்களில் எழுந்தருளுகிறார்.
தங்கப்பல்லக்கில் இன்று புறப்பாடு
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 1-ந் தேதி மாலையில் சுவாமி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று தோளுக்கினியான் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வெளி பிரகாரத்தில் வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பகதர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (புதன்கிழமை) காலையில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். அதை தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகராக கோலம் கொண்டு பெருமாள் மதுரையை நோக்கி புறப்படுகிறார்.
அப்போது 18-ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். வழி நெடுகிலும் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்களில் அழகர் எழுந்தருள்வார்.
பொன் சப்பரம் எழுந்தருளல்
தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலையில் மூன்று மாவடி பகுதியில் காலை 6 மணிக்கு சுவாமி அதே பல்லக்கில் எழுந்தருள்வார். அப்போது பக்தர்கள் எதிர்சேவை செய்து வணங்கி வரவேற்பார்கள். நாளை இரவு 9 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாள் திருமஞ்சனமாகி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுடைய திருமாலையை சாற்றி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
நாளை மறுநாள் (5-ந் தேதி) அதிகாலையில் 2.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் எழுந்தருளல் நடைபெறும்.
வைகை ஆற்றில் இறங்குகிறார்
அதை தொடர்ந்து காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள். 6-ந் தேதி தேனூர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருள்வது நடைபெறும். அன்று இரவு தசாவதார காட்சி நடைபெறும்.
இந்த வருடம் 480 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.