காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதிராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் ஜி.ரவிசந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்து செயல்படுத்தியமைக்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து கொள்வது.
குடும்ப தலைவிக்கு கலைஞரின் உரிமைத் தொகை ரூ.1000 வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் வழங்கப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து கொள்வது.
சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியமைக்காக இந்திய அரசு இஸ்ரோ நிறுவனம் மற்றும் இத்திட்டத்தின் இயக்குனர் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்து கொள்வது.
மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ஜூலை 2023 மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு தொகைகள் வழங்கப்பட்டமைக்கு நிர்வாக அனுமதி கேட்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், இல.சரவணன், சாந்திகண்ணன், நந்தினிநரேஷ், கோவிந்தராஜ், சத்தியாவெங்கடேசன் உள்பட உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) தி.அண்ணாதுரை நன்றி கூறினார்.