அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கீழ்வேளூர் அருகே அய்யடிமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே அய்யடிமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குண்டும், குழியுமான சாலை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் 75 அனக்குடி ஊராட்சியில் உள்ள அய்யடிமங்கலம் கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் இருந்து 150 மாணவ- மாணவிகள் நாகை மற்றும் திருவாரூரில் உள்ள பள்ளி, கல்லூரியில் படித்து வருகின்றனர்.
அய்யடிமங்கலத்தில் இருந்து வண்டலூர் செல்லும் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார்ச்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.
கிராம மக்கள் மறியல்
மேலும் இந்த பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படமால் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் அய்யடிமங்கலம் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கீழ்வேளூர்-கச்சனம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.