காதல் கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா
திருச்சி மாவட்டம் பேரூரை அடுத்த ஜெமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மருதைவீரன். இவருடைய மகள் நர்மதா (வயது 28). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வேலை தேடி வந்துள்ளார். பின்னர் கொங்கு மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் நர்மதா வேலை பார்த்து வந்தார். அப்போது திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் ஹரிராஜ் அதே நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த பகுதியில் உள்ள முருகன் கோவிலில் ஹரிராஜ÷ம், நர்மதாவும் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். பின்னர் அதே மாதம் 21-ந்தேதி இருவரும் திருமணத்தை முறைப்படி பதிவும் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஹரிராஜ் மனைவி நர்மதாவுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அதன் பின்பு சில மாதங்கள் கழித்து இருவரும் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த ஆண்டு ஆடி மாதத்தையொட்டி ஹரிராஜ் நர்மதாவை அழைத்துக் கொண்டு, மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஓரிரு நாட்கள் இருந்த அவர், 10 நாட்கள் கழித்து நர்மதாவை அழைத்து வருமாறு கூறிவிட்டு, அங்கிருந்து திருப்பூருக்கு வந்து பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். 10 நாட்கள் கழித்து நர்மதாவை அவருடைய தந்தை திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளார். மகளும், மருமகனும் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற அவர், அங்கிருந்து ஹரிராஜை அங்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அங்கு வருவதற்கு ஹரிராஜ் மறுத்ததுடன், நர்மதாவுடன் வாழ விருப்பமில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து நர்மதா கடந்த ஆகஸ்டு மாதம் திருப்பூர் கொங்குநகர் சரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் ஹரிராஜ், நர்மதாவை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் பலகட்டங்களாக தம்பதிக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிகிறது. ஆனாலும் ஹரிராஜ் நர்மதாவுடன் சேர்ந்து வாழ மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாதியை காரணம் காட்டி தன்னுடன் வாழ மறுப்பதாகவும், வீடு கட்டுவதற்கு பல லட்சம் பணம் கேட்பதாகவும் கூறியும், காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தியும், நர்மதா தனது தந்தை மருதைவீரனுடன் நேற்று பாண்டியன்நகர் பகுதியில் உள்ள ஹரிராஜ் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஹரிராஜ் மற்றும் அவருடைய பெற்றோர் வீட்டில் இல்லாததால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் என்னை எனது கணவர் சேர்த்துக் கொள்ளும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறி நேற்று இரவு வரை நர்மதா தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.