சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தர்ணா போராட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக வழங்குவதை கைவிட்டு சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குடும்ப ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும். காலமுறை ஊதியம் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், செயலாளர் செந்தில்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன், மாநில துணை தலைவர் குப்புசாமி, பொருளாளர் மகேந்திரபூபதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.