ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் தர்ணா
உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில் விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதைப்பிரச்சினை
உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காம் பாளையத்தில் இருந்து ராகல்பாவி மற்றும் ஆர்.வேலூர் இணைப்பு சாலை வரை செல்வதற்கு நிலவியல் பாதை உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பாதையை அந்த பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக நிலவியல் பாதையாக பயன்படுத்தி வந்ததாகக்கூறப்படுகிறது.ஆனால் தற்போது அருகில் உள்ளவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சுற்றுப்பகுதியைச்சேர்ந்த விவசாயிகளின் வலியுறுத்தலின் பேரில் அந்த இடத்தை அளப்பதற்கு, வருவாய் துறையினர், போலீசாருடன் நேற்று அங்கு சென்றபோது அந்த பகுதியில் பட்டா இடத்தில் இருக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் அதிகாரிகள் அந்த இடத்தை அளக்காமல் திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆடு, மாடுகளுடன் தர்ணா
இதைத்தொடர்ந்து அந்த இடத்தை நிலவியல் பாதையாக பயன்படுத்தி வந்த சுமார் 20 விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தலைமையில் நேற்று மாலை உடுமலை கச்சேரி வீதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு ஆடுகள் மற்றும் மாடுகளுடன் வந்தனர்.
அவர்கள் அந்த பாதையை பயன்பாட்டிற்கு மீட்டுதரக்கோரி தாலுகா அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் கைகளில் பிடித்திருந்தனர். விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பேச்சுவார்த்தை
அதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. தாசில்தார் கண்ணாமணி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்கண்ணன், ராஜ்கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கனகராஜ், ஜெகதீசன், பாலதெண்டபாணி மற்றும் தர்ணா போராட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த்கண்ணன் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆடு,மாடுகளுன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.