கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் தர்ணா
திருப்பூர்,
திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சபை கட்டிடம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது. மண்ணரை பாரப்பாளையத்தில் பெத்தேல் அசெம்பிளீஸ் ஆப் காட் திருச்சபை வாடகை கட்டிடத்தில் உள்ளது. போதகராக அமல்ராஜ் உள்ளார். இவர் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் கடந்த ஆண்டு நிலம் வாங்கி சுற்றுச்சுவர் கட்டும் பணியை மேற்கொண்டார். அப்போது இந்து முன்னணியினர் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியதுடன், அந்த பகுதியில் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லைஎன்றும் புகார் கூறி பெத்தேல் அசெம்பிளீஸ் ஆப் காட் திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். திருச்சபை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை
பின்னர் கலெக்டர் வினீத்தை சந்தித்து மனு அளித்து முறையிட்டனர். முடிவு தெரியும் வரை கலெக்டர் அலுவலகத்தில் இருப்போம் என்று கூறி தர்ணாவை மதியம் வரை தொடர்ந்தனர். அதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தர்ணாவை கைவிட்டனர்.