ஊராட்சி செயலர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை


ஊராட்சி செயலர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
x
திருப்பூர்

தாராபுரம் அருகே ஊராட்சி செயலர் வீட்டில் 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.85 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஊராட்சி செயலர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொண்டரசம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 49). இவரது மனைவி வள்ளிநாயகம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கதிர்வேல் கொங்கூர் ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது சொந்த ஊரான வெள்ளக்கவுண்டன்வலசுவில் நடைபெற்ற கிடா வெட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றார். பின்னர் நேற்று காலையில் வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் கொள்ளை

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 35 பவுன் நகைகள், 2 வெள்ளி கொலுசு மற்றும் ரூ.85 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கதிர்வேல் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், காம்பவுண்டு சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்து வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

போலீசார் தடயவியல் துறையினர் உதவியுடன் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் பீதி

கடந்த சில நாட்களாக தாராபுரம் வட்டார பகுதியில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போயுள்ளது. மேலும் முகமூடி ஆசாமிகள் தனியே நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்கிறார்கள். சில மாதங்களாக 100-க்கும் மேற்பட்ட நகை பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் முனைப்பு காட்டிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story