12 மணி நேர வேலை மசோதா வாபஸ் தேவையில்லாத ஒன்று-நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
12 மணி நேர வேலை மசோதாவை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
"12 மணி நேர வேலை மசோதாவை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று" என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
இந்து முன்னணி அலுவலகம்
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் இந்து முன்னணி அலுவலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், நெல்லை மாவட்ட செயலாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடம்
இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தை பற்றி பேசி வருகிறோம். திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, துளு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளை உள்ளடக்கியது. மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும். மக்களுக்காக நல்ல சட்டங்களை கொண்டுவர வேண்டும். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். மக்கள் மனதில் இடம்பெற வேண்டும். இதுதான் நல்லாட்சியின் அடையாளம். திராவிட மாடல் ஆட்சி என்பது எந்த வகையில் உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. 2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முழுமையாக எந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
சட்டம்-ஒழுங்கு
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக பல போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தால் அதற்கான மனு ரசீது கூட கொடுப்பது இல்லை.
எல்லோருக்கும் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியும். குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும் பாதுகாப்பு, ஒரு சிலருக்கு மட்டும் பாதுகாப்பு என்று இருந்தால் எப்படி இது சமமான ஆட்சியாக இருக்க முடியும்?
12 மணி நேர வேலை
12 மணி நேர வேலை மசோதாவை தி.மு.க. தான் சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த சட்டம் எல்லா தொழிற்சாலைகளுக்கும் பொருந்தாது. சில தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்கும் வகையில் உள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று.
கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கு உள்ளது. சில விஷயங்களை கோடிட்டு காட்ட வேண்டியது கவர்னருக்கு அவசியமானது. அவர் கூறுவது சரியாக இருக்குமேயானால் அதனை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், மத்திய அரசு வக்கீல் பாலாஜி கிருஷ்ணசாமி மற்றும் இந்து முன்னணி, பா.ஜனதா கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.