1,200 பக்க குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த வழக்கில் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரிய கலவரமாக வெடித்து வன்முறையில் முடிந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கைகள்
மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அவரது தாய் செல்வி, சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே கலவரத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சென்னை ஐகோர்ட்டு நியமித்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினர், ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்து தங்கள் ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த நிலையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் நேற்று சுமார் 1,200 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
இவற்றுடன் மாணவி ஸ்ரீமதி பயன்படுத்தி வந்த செல்போனில் இருந்த உரையாடல் பதிவுகள், ஆய்வக அறிக்கைகள், பள்ளி வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் உள்ளிட்ட 100 ஆவணங்களையும் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.