தூத்துக்குடியில் 2-வது நெய்தல் கலைத்திருவிழா தொடங்கியது


தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 2-வது நெய்தல் கலைத்திருவிழாவை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி., மண்சார்ந்த கலை வடிவங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

தூத்துக்குடி

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு அருகில் உள்ள திடலில் 4 நாட்கள் நெய்தல் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.

கனிமொழி எம்.பி.

விழாவுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் ஜெகன்பெரியசாமி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

அடுத்த தலைமுறைக்கு...

மனித உயிர் தோன்றியதே கடலில் இருந்து தான், அதனால் அந்த கடலுக்கு நன்றி கூறும் வகையில் இந்த நெய்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடல் இல்லையென்றால் வேறு எதுவுமே கிடையாது. நம்முடைய பெருமை எல்லாம் உலகுக்கு சென்று சேர்ந்ததும் இந்த கடல் வழியாகத்தான். தமிழர்களின் பெருமையை சொல்லக்கூடிய நிலம் மட்டுமின்றி, மனித உயிர்கள் தோன்றி இந்த மண்ணுக்கு வந்த நிலம் நெய்தல் நிலம் ஆகும்.

மனித உயிர் தோன்றியபோது, தங்களை வெளிப்படுத்திக் கொள்ள, வாழ்க்கையை பதிவு செய்து கொள்ள கலைகள்தான் உதவியாக இருந்தன. மனித குலத்தை பதிவு செய்து வைத்து இருக்கக்கூடிய பதிவுகளை, அதில் உள்ள உணர்வுகளை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க பயன்படுவது கலைகள். அதனால்தான் மண்சார்ந்த கலை வடிவங்களை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நமது பாரம்பரிய உணவு, இந்த மண்ணில் வாழக்கூடிய மனிதர்களுக்கு ஏற்ற உணவு என்ன என்பதை அந்த மண் விளைவித்து தரும். இந்த மண் உங்களுக்கு எதை தருகிறதோ, உங்கள் வாழ்க்கை உங்களுக்கு எதை கற்றுத்தருகிறதோ, அதை நினைவுபடுத்திக் கொள்ளும் விதமாக நம் கலைகள், உணவு வகைகள், கைவினை பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கிராமிய கலைநிகழ்ச்சிகள்

தொடர்ந்து கணேஷ்கா சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சகா கலைக்குழு, காஞ்சி கைச்சிலம்பாட்ட கலைக்குழு, செவி இசைக்குழு-ஆதிமேளம், தேன்மொழி ராஜேந்திரன் கரகம், நையாண்டி மேளம், ஐந்திணை ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோன்று கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40 அரங்குகளுடன் கூடிய உணவுத்திருவிழாவும் நடந்தது.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), தமிழரசி (மானாமதுரை), ராஜா (சங்கரன்கோவில்), கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், உதவி கலெக்டர் கவுரவ்குமார், தாசில்தார் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.

இந்த விழா வருகிற 1-ந் தேதி வரை தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.


Next Story