9 ஆண்டுகளில் பா.ஜனதா செய்த சாதனை ஒன்றுமில்லை -சீமான் பேட்டி
கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜனதா செய்த சாதனை ஒன்றுமில்லை சீமான் கூறினார்.
செம்பட்டு,
டெல்டா பகுதிகளில் கடைமடை வரை நீர் சென்று சேர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நமது தண்ணீரின் தேவைக்காக மற்ற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை இருக்கும் வரை, இந்த நிலை தொடரத்தான் செய்யும். கடலூர் வீரநாராயண ஏரியை தூர்வாரி நீரை சேமிக்கலாம். மேலும் ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு 16 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. அங்கிருந்து குழாய்கள் மூலம் தண்ணீரை இங்கு கொண்டு வந்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
பா.ஜனதா சாதனை இல்லை
சில இடங்களில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்கிறார். ஆனால் விளைந்த பயிர்களின் மீது மணலைக் கொட்டி சாலை அமைப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். கீழ்பவானியில் சிமெண்டு தளம் அமைப்பதை தடுக்க வேண்டும். மீண்டும் மின் கட்டண உயர்வு போன்றவற்றால் பொருட்களின் விலை உயர்வை தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கர்நாடகத்தில் இலவச அரிசி வழங்க, தமிழகத்தில் இருந்து அதிக அளவில் அரிசி கொள்முதல் செய்யப்படுவதால் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆட்சியின் சாதனையை அமித்ஷா கூற முடியாது, வேதனையை மட்டுமே கூற முடியும். அதானியை வளர்த்து விட்டது தவிர இவர்கள் 9 ஆண்டுகளில் பா.ஜனதா செய்த சாதனை ஒன்றுமில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாறி மாறி குற்றங்களை சுமத்தி வருகிறார்கள். யாரும் பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை. உதயநிதியை துணை முதல்-அமைச்சராக விரைவில் ஆக்குவார்கள். தி.மு.க., பா.ஜ.க. வெறும் செய்தி அரசியல் மட்டுமே நடத்தி வருகிறது.
ஒரே நிலைப்பாடு
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. கவர்னருக்கு கொடுக்கப்பட்ட வேலை வேறு, அவர் செய்து கொண்டிருக்கும் வேலை வேறு. திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்யக்கோரி பல்வேறு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சி உள்ளவரை இலங்கை தமிழர்களும், இஸ்லாமிய சகோதரர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.