ரேஷன் கடை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவளிக்கும்
ரேஷன் கடை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவளிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் கடை ஊழியர்களை அழைத்து பேசி அவர்களுக்கு தரவேண்டிய அகவிலைப்படி உயர்வு, மளிகை பொருட்களை அவர்கள் மீது திணிக்கும் முடிவை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்று அறிவிப்பது, புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற தொழிலாளர் விரோத செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற அ.தி.மு.க. ஆதரவளிக்கும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.