கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; விறகு கட்டையால் தாக்கியதில் கட்டிட மேஸ்திரி பலி


கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; விறகு கட்டையால் தாக்கியதில் கட்டிட மேஸ்திரி பலி
x
தினத்தந்தி 8 Dec 2022 7:10 PM IST (Updated: 9 Dec 2022 6:48 AM IST)
t-max-icont-min-icon

கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது விறகு கட்டையால் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது விறகு கட்டையால் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட மேஸ்திரி

சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24), இவர் சென்னை அடையாறு சத்யா நகரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

இவரிடம் ஆத்துவாம்பாடி ஜோதி நகர் கொல்லமேட்டை ேசர்ந்த தங்கதுரை (36) என்பவர் வேலை செய்து வந்தார்.

அப்போது மணிகண்டனிடம் தங்கதுரை ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் தங்கதுரை தனது ஊருக்கு வந்து பசுபதி என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். மணிகண்டன் கடந்த 4-ந் தேதி தனது ஊரில் நடந்த சீமந்த விழாவில் கலந்து கொள்ள வந்தபோது, தங்கதுரையுடன் சேர்ந்து பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் மது அருந்தி உள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

அப்போது கொடுத்த பணத்தை மணிகண்டன் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தங்கதுரை, கொடுத்த பணத்தை கேட்பாயா? என தகராறு செய்து விறகு கட்டையால் மணிகண்டனை அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

கொலை வழக்காக மாற்றம்

இதுகுறித்து மணிகண்டனின் தந்தை சிவக்குமார் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தங்கதுரையை போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்.

தற்போது இந்த வழக்கில் மணிகண்டன் இறந்து விட்டதால் போளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story