கலைஞர் நூலக பணிகள், இந்த மாத இறுதிக்குள் நிறைவு பெறும்-அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கலைஞர் நூலக பணிகள், இந்த மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
மதுரை,
கலைஞர் நூலக பணிகள், இந்த மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
அமைச்சர்கள் ஆய்வு
மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் கட்டிட பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கலெக்டர் அனிஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
கலைஞர் நூலகம் சுமார் ரூ.114 கோடி செலவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியது. ஆனால் தற்போது இந்த கட்டிடத்திற்கு கூடுதலாக ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. தரைதளத்துடன் கூடிய 6 மாடி கட்டிடமாக 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் இந்த நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் 1 லட்சத்து 70 ஆயிரம், ஆங்கில புத்தகங்கள் 2 லட்சத்து 75 ஆயிரம், 6 ஆயிரம் இ-புத்தகங்கள் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
செல்லூர் பாலம்
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பழங்கால ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்படுவதைப் போன்று, கலைஞர் நினைவு நூலகத்திலும் பழங்கால ஓலைச்சுவடிகளை நூலகத்திற்கு படிக்க வருகின்றவர்களுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகத்தின் கட்டுமான பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளன. இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் பணிகள் நிறைவடையும். அதன்பின் நூலகத்தில் புத்தகங்கள் காட்சிப்படுத்துவதற்கு வேண்டிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செல்லூர் பாலம் இணைப்பு பாலத்திற்கான பணியினை ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.