போலீஸ் நிலையத்திற்குள் தாக்குதல் சம்பவம் - தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதை காட்டுகிறது - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி


போலீஸ் நிலையத்திற்குள் தாக்குதல் சம்பவம்  - தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதை காட்டுகிறது - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 17 March 2023 2:17 AM IST (Updated: 17 March 2023 2:50 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு விட்டதற்கு உதாரணமாகி விட்டது. என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்

மதுரை

திருப்பரங்குன்றம்

போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு விட்டதற்கு உதாரணமாகி விட்டது. என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்

புதிய உறுப்பினர் அட்டை

திருப்பரங்குன்றத்தில், மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட சார்பில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கிகட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மேலூர். மதுரை கிழக்கு ஆகிய 3 தொகுதியிலும் தலா ஒரு லட்சம் வீதம் 3 லட்சம் பேருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. பொதுவாக அலுவலகம், கூட்டம் நடக்கின்ற இடங்களில் உட்கட்சி பிரச்சினை நடந்துள்ளது. ஆனால் போலீஸ் நிலையத்திற்குள் உள்கட்சி பிரச்சினை நடந்துள்ளது. இந்த மாதிரி தி.மு.க.வினரால்தான் முடியும். போலீஸ் நிலையத்திற்குள் ரவுடியிசம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வரலாற்றில் இதுபோன்று மற்ற கட்சிகளில் நடந்தது இல்லை. திருச்சியில் மட்டுமல்ல தமிழகத்தின் முழுவதும் போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினரின் அத்துமீறலுக்கு இதுவே முன் உதாரணம்.

சட்டம்- ஒழுங்கு

தி.மு.க.வினரின் உள்கட்சி விவகாரத்தில் போலீஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடந்துள்ளதை எண்ணி பார்க்கும்போது சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று தானே பொருள். மதுரை விமான நிலையத்தில் அவதூறாக பேசி முரண்பாடாக நடந்து கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்காமல் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதற்கு நியாயம் கேட்டால் கட்சி நிர்வாகிகள் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மீது வழக்கு போடுகிறார்கள். மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியமான பால் விலை உயர்த்தப்பட்டது. தட்டுப்பாடும் நிலவுகிறது. முறையீடு நடப்பதாகவும் புகார் வருகிறது. இது தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை குறிக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை, ஆங்கில தேர்வை 40 ஆயிரம் பேர் எழுதவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்

மக்களுக்கான திட்டம் இல்லை

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை பெயரில் நூலகம் கட்டியுள்ளார். மற்றபடி சொல்லும்படியாக மக்களுக்காக எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மதுரையில் உள்ள 2 அமைச்சர்கள் நிதியை அதிகரித்துள்ளோம் என்று கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதிபடி எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தியதாக இல்லை. ஓ.பன்னீர்செல்வம், தினகரன் தன் சுயநலத்திற்காக செயல்படுகிறார்கள். அதை அங்கு இருப்பவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று வருவார்கள். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்களிடம் இனி யாரும் இருக்க போவதில்லை. அவர்கள் மட்டுமே தனியாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலை இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் பொன்முருகன், எம்.ஆர். குமார், திருநகர் பாலமுருகன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story