வெள்ளமடம் அருகே பள்ளத்தில் ஆட்டோ பாய்ந்தது; கணவன், மனைவி உள்பட 4 பேர் காயம்
பள்ளத்தில் ஆட்டோ பாய்ந்த விபத்தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
ஆரல்வாய்மொழி,
பள்ளத்தில் ஆட்டோ பாய்ந்த விபத்தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 55). இவருடைய மனைவி இசக்கியம்மாள் (49).
மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று ஒரு ஆட்டோவில் மகேந்திரன், தனது மனைவி இசக்கியம்மாள், மகள் இந்துமதி (25) ஆகியோருடன் வடக்கன்குளத்தில் இருந்து காவல்கிணறு-நாகர்கோவில் நான்கு வழிச்சாலை வழியாக சென்றார். ஆட்டோவை மலரகன் (57) என்பவர் ஓட்டினார். வெள்ளமடத்தை அடுத்த நாக்கால் மடம் சுங்கச்சாவடி அருகே சென்றடைந்த போது சூறைக்காற்று வீசியதால் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. மேலும் அதில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.