குட்டி யானை முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது
தர்மபுரியில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு முதுமலை முகாமுக்கு கொண்டு வந்தனர்.
கூடலூர்,
தர்மபுரியில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு முதுமலை முகாமுக்கு கொண்டு வந்தனர்.
தாயை பிரிந்து தவித்தது
தர்மபுரியில் கடந்த வாரம் 3 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி பலியானது. இதனால் 2 குட்டி யானைகள் தாயை இழந்து தவித்தன. பின்னர் பல்வேறு கட்டமாக முயற்சி செய்து குட்டி யானைகளை பிற காட்டு யானைகள் கூட்டத்துடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தற்போது அந்த குட்டி யானைகள் வனப்பகுதியில் உள்ளன.
இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் தாயைப் பிரிந்து 5 மாத ஆண் குட்டி யானை தவித்து கொண்டிருந்தது. இதனால் தாயிடம் சேர்க்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பாகன் பொம்மன் தர்மபுரிக்கு வரவழைக்கப்பட்டார். தொடர்ந்து வனத்துறையினருடன் இணைந்து குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் பணி நடைபெற்று வந்தது.
குட்டி யானை
இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்த குட்டி யானை வழி தவறி தனியார் நிலத்தில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ், ஓசூர் டாக்டர் பிரகாஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் பல்வேறு கட்டமாக தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் ஒகேனக்கல் பகுதியில் இருந்து வாகனத்தில் குட்டி யானை பாதுகாப்பாக முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களுடன் பாகன் பொம்மன் மற்றும் வன ஊழியர்கள், மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்து சேர்ந்தனர். பின்னர் பாகன் பொம்மன் குட்டி யானைக்கு கற்பூர தீபாராதனை காண்பித்தார். தொடர்ந்து ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த மரக்கூண்டில் குட்டி யானை அடைக்கப்பட்டது.
தனிமைப்படுத்தினர்
மேலும் அதனுடன் பாகன் பொம்மன் தங்கினார். தொடர்ந்து குட்டி யானையின் உடல் நலனை மேம்படுத்த மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தொற்று பரவாமல் இருக்க குட்டி யானையை வனத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். இதனால் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை முகாமுக்கு 29-வதாக புதிய குட்டி யானை வந்துள்ளது. இதை பாகன் பொம்மன் பராமரிக்கும் பணியில் ஈடுபடுவார் என்றனர். குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதால் பாகன் பொம்மன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.